சபரிமலையில் பாதுகாப்பு இல்லை, திரும்பி வருவோம் எனச் சபதம் எடுத்துச் சென்ற 5 பெண்கள்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்த கேரள காவல் துறை...


கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு வந்த போதிருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.


இந்த போராட்டங்கள் ஒருகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையாக உருமாற்றப்பட்டது. இந்த செயலுக்குப் பின்னால், பாஜகவும் ஆர்எஸ்எஸும் இருப்பதாகக் குற்ற சாடுகள் முன் வைக்கப்பட்டன. எனினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்த கேரள அரசு, சபரிமலை ஐயப்பனைக் காண வந்த பெண்களுக்கு தங்களால் முடிந்தளவு பாதுகாப்பு வழங்கியது.

இந்த போராட்டங்களுக்கு மத்தியில், பல பெண்கள் ஐயப்பனை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு இப்போது ஐயப்பன் சீசன் தொடங்கியபோது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைனில், ஐயப்ப சாமியைக் காண விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் குறித்து அறிந்த கேரள காவல் துறை, “ஐயப்பனைக் காண வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது” எனக் கூறியது.

இந்த பதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள காவல் துறை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்றே தெரிகிறது எனப் பெண்ணியவாதிகளிடமிருந்து கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில், பிரபல பெண்ணியவாதியான திருப்தி தேசாய், பிந்து உட்பட 5 பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல கேரள சென்றிருந்தனர். பிந்து வருவதையறிந்த இந்து அமைப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, பிந்து முகத்தில் மிளகாய்ப்பொடி ஸ்ப்ரேயை அடித்துத் துன்புறுத்தினர்.