ரஜினிகாந்த் அடிக்கும் ஒரே கல்லுல இரண்டு மாங்காய்

ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக மாற்றிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தாலும் சமீபகாலமாக, தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்த் பேசிவருகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கேட்கப்படும் கேள்வி. திரைப்படங்கள் மூலமாகப் பெரும்பாலான ரசிகர்களை ரஜினிகாந்த் பெற்றது மட்டும் இதற்கு காரணம் அல்ல. திரைப்பட வசனங்கள், பாடல் வரிகள், அவ்வப்போது கொடுக்கும் பேட்டிகள் ஆகியவற்றில் பூடகமாக அரசியலில் நுழைவது குறித்துப் பேசிவந்தார். அதனாலேயே அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தக் கேள்வி இத்தனை ஆண்டுகாலமாக பதில் தெரியாமல் உலவிவருகிறது.

சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவரெல்லாம் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது; ரஜினியை கலாய்க்கும் அதிமுக...

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கலைஞர் கருணாநிதி வயது முதிர்ச்சியால் உடல் நலிவடைந்திருந்த போது 2017ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, “அடுத்துவரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கட்டாயம் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன்” என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு நலத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஊடகங்களும் அதன் பின் அவரிடம் அரசியல் கட்சித் தலைவரிடம் கேட்கும் கேள்விகளைக் கேட்டுவந்தன. பல கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த அவர் சில கேள்விகளுக்குப் பட்டும்படாமலும் கருத்து சொல்லிவந்தார்.

தனது கருத்துகள் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாகவே இருந்துவந்தார். சில சமயங்களில் பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தார்.